புதுக்கோட்டை, அன்னவாசல் பகுதிகளில் பலத்த மழை


புதுக்கோட்டை, அன்னவாசல் பகுதிகளில் பலத்த மழை
x
தினத்தந்தி 7 Jun 2022 12:58 AM IST (Updated: 7 Jun 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை, அன்னவாசல் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

பலத்த மழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 5 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டன. மாலை 5.30 மணிக்கு மேல் லேசாக தூறியது. சிறிது நேரத்திற்கு பின் மழை பரவலாக பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரவில் தூறியபடி இருந்தது. இந்த மழையினால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சாக்கடை கால்வாய்களில் இருந்து வெளியேறிய கழிவுநீர் மழைநீரோடு கலந்தோடியது. கடும் வெப்பத்தால் அவதிப்பட்ட நிலையில் இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள அரசு விழாவுக்கான மேடை, பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழையால் மழைநீர் ஆங்காங்கே தேங்கியது. மேலும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னை மரத்தில் தீ

நேற்று இரவு இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, அன்னவாசல், சித்தன்னவாசல், குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி, நார்த்தாமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில் செங்கப்பட்டியில் ஒரு தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் தீப்பற்றி எரிந்தது. இலுப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

ஆலங்கட்டி மழை

முக்கண்ணாமலைப்பட்டியில் ஆலங்கட்டியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் சிறிய, சிறிய பனிக்கட்டிகள் விழுந்தன. இதனால் ஆச்சரியமடைந்த பொதுமக்கள் ஆலங்கட்டிகளை ஆர்வமுடன் பாத்திரத்தில் சேகரித்தனர்.


Next Story