ஈரோட்டில் இடி-மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை
ஈரோட்டில் இடி-மின்னலுடன் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது.
ஈரோட்டில் இடி-மின்னலுடன் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது.
இடி-மின்னலுடன் மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
ஈரோட்டில் நேற்று பகல் வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. அதைத்தொடர்ந்து மாலையில் வானில் கரு மேகங்கள் திரண்டன. இரவு 8.30 மணிக்கு இடி -மின்னலுடன் சாரல் மழை பெய்யத்தொடங்கியது.
இந்த மழை சிறிது நேரத்தில் வலுப்பெற்று இரவு 10.15 மணி வரை பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. அதன் பின்னரும் மழை தூறிக்கொண்டே இருந்தது.
வெப்பம் தணிந்தது
இதனால் ஈரோடு பஸ் நிலையம், முனிசிபல் காலனி, பெருந்துறை ரோடு, பெரியவலசு, வீரப்பன்சத்திரம், மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, ஈ.வி.என். ரோடு, கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ரோட்டில் ஓடியது.
ஒரு சில இடங்களில் சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்ததால் மழை நீருடன், சாக்கடை கழிவுநீரும் கலந்து ஓடியது. மேலும் நகரின் தாழ்வான பகுதியில் மழை நீர் குட்டை போல் தேங்கி நின்றது. மழை காரணமாக இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
சிவகிாி
இதேபோல் சிவகிரியில் கடந்த 2 நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டியது. இந்த நிலையில் நேற்று இரவு 7.45 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இரவு 8.30 மணி வரை இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. இதேபோல் வேட்டுவபாளையம், கவுண்டம்பாளையம், அம்மன்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் மழை கொட்டியது. இதனால் சிவகிரி நகர் பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.