மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை


மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை
x

மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

புதுக்கோட்டை

கனமழை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் இன்று அதிகாலை லேசான தூறலுடன் மழை தொடங்கியது. பின்னர் விட்டுவிட்டு பெய்த கனமழை மாலையில் சுமார் 2 மணிநேரம் வெளுத்து வாங்கியது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். கொட்டித்தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கறம்பக்குடி புதுக்கோட்டை சாலை, அக்ரஹாரம், மாரியம்மன் கோவில், டி.இ.எல்.சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்தனர்.

விவசாயிகள் வேதனை

மேலும் கறம்பக்குடி தாலுகாவில் ஒரு சில பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று பெய்த மழையால் அறுவடை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதேபோல் கறம்பக்குடி பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும் மழைநீர் புகுந்தது. நெல் குவியல்கள் மழை நீரில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

வடகாடு

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் இருந்தே கன மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், நெல் பயிரிட்டு அறுவடை செய்ய தயாராக இருந்த விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர். இப்பகுதகளில் வடகிழக்கு பருவமழையும் பொய்த்து விட்ட நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் குளம், குட்டைகளுக்கு தண்ணீர் செல்ல வரத்து வாரிகள் இன்றி ஆங்காங்கே கடை, வீடு மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் காலையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்று விட்டு பள்ளி முடிந்து மீண்டும் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு வந்தனர். தற்போது கந்தர்வகோட்டை பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், அறுவடை செய்த நெல் மணிகள் மழையில் நனைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

கோட்டைப்பட்டினம்

கோட்டைப்பட்டினம் கடலோர பகுதிகளான கட்டுமாவடி, மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.திருவரங்குளம் வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.


Related Tags :
Next Story