நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை


நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை
x

கும்பகோணத்தில் 3-வது நாளாக நள்ளிரவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் 3-வது நாளாக நள்ளிரவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் கோடைகாலம் போல் வெயில் சுட்டெரித்த வண்ணம் உள்ளது. அடிக்கடி மழை பெய்து பூமியை குளிர வைத்தாலும், வெயிலானது 100 டிகிரி அளவுக்கு கொளுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. பகலில் சாலைகளில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்து வருகிறது.

பகலில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றால் இரவிலும் அதன் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது. வீடுகளில் மின் விசிறிகளில் இருந்து கூட அனல் காற்று வீசுகிறது. இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் கொளுத்துவதும் நள்ளிரவு நேரங்களில் மழை பெய்வதுமாக இருந்து வந்தது.

கொட்டித்தீர்த்த கனமழை

இதனால் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நேற்று முன்தினம் காலை முதல் மழை இன்றி வெயில் கொளுத்தியது. மாலை நேரத்தில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. ஆனால் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சாரல் மழையாக பெய்ய தொடங்கியது. பின்னர் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. 3-வது நாளாக பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வெப்பம் தணிந்து இரவில் குளிர் நிலவியது. இதேபோல கும்பகோணத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் தற்போது கும்பகோணம் வட்டார பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story