தேனி மாவட்டத்தில் பலத்த மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி


தேனி மாவட்டத்தில் பலத்த மழை:  வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.

தேனி

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இதேபோல் க.விலக்கு, முத்தனம்பட்டி, பிராதுகாரன்பட்டி, மாலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதற்கிடையே, மாலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாயக்காள் (வயது 75). கணவர் இறந்து விட்டதால் இவர், தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவர் திடீரென இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


Related Tags :
Next Story