உடையார்பாளையம், விக்கிரமங்கலம் பகுதிகளில் பலத்த மழை
உடையார்பாளையம், விக்கிரமங்கலம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று மதியம் வெயிலின் தாக்கம் குறைந்து வானில் கருமேகம் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் உடையார்பாளையம், கழுமங்கலம், முனியத்தரியான்பட்டி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூசையப்பர்பட்டினம், இடையார், ஏந்தல், வானத்திரியான்பட்டினம், ஒக்கநத்தம், பிலிச்சிக்குழி, காடுவெட்டாங்குறிச்சி, சோழங்குறிச்சி, பருக்கல், வெண்மான்கொண்டான் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணியளவில் தொடங்கிய மழை இரவு 8 மணி வரை பெய்தது குறிப்பிடத்தக்கது.இதேபோல் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, ஸ்ரீபுரந்தான், உல்லியக்குடி, நாகமங்கலம், கடம்பூர், வி.கைகாட்டி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் மழையை எதிர்பார்த்து ஆடிப்பட்டத்தில் விவசாயம் செய்ய உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் கூறினர்.