தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை - வானிலை மையம் தகவல்
மாண்டஸ் புயல் கரையை கடக்க 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, காட்டுபாக்கம், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் தரைக்காற்று 60 கி.மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது.
இந்த மாண்டஸ் புயல் கரையை கடக்க 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.