ஏற்காட்டில் சாரல் மழை: கடும் பனிமூட்டத்தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ஏற்காட்டில் சாரல் மழை: கடும் பனிமூட்டத்தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x

ஏற்காட்டில் நேற்று பெய்த சாரல் மழை மற்றும் கடும் பனி மூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சேலம்

ஏற்காடு:

கடும் பனிமூட்டம்

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் காலை மற்றும் இரவில் பொதுமக்கள் சுவர்ட்டர், குல்லா அணிந்தபடி வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். மேலும் கம்பளி துணி போர்த்தியபடி சாலைகளில் நடமாடுவதை காண முடிகிறது.

இந்தநிலையில் ஏற்காட்டில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. முன்னால் செல்வோர் கூட தெரியாத அளவுக்கு இந்த பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இந்த பனிமூட்டத்தின் நடுவே சாரல் மழையும் பெய்தது. விட்டு, விட்டு பெய்த மழையால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததால் கட்டிட வேலை மற்றும் எஸ்டேட் வேலைகள் நிறுத்தப்பட்டன.

நேற்று முழுவதும் இதே நிலை நீடித்ததால் மலைப்பாதையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story