மலை பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை


மலை பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மலை பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் மலை பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொட்டி தீர்த்த கனமழை

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனாலும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சில நாட்கள் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அணைகளில் தற்போது போதிய தண்ணீர் இருப்பதால் கும்பப்பூ சாகுபடியை நல்ல முறையில் முடித்து விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டது.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணை பகுதி மற்றும் மலையோரப் பகுதிகளான களியல், நெட்டா, ஆறுகாணி, பத்துகாணி, கடையாலுமூடு, திற்பரப்பு, திருந்திக்கரை மற்றும் குலசேகரம் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.

அருவியில் வெள்ளப்பெருக்கு

இதில் சில இடங்களில் 2 மணி நேரம் இடைவிடாமல் பெய்ததால் சாலைகளை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தது. மேலும் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அதன் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியிலும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அங்கு சிறுவர் நீச்சல் குளத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தது.

இதையடுத்து பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே அங்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேலும் இந்த மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதில் சிற்றாறு அணைக்கு மட்டும் பிற்பகல் 3 மணிக்கு வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

தொடர் மழையின் காரணமாக அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் நேற்று முன்தினம் முழுமையாக ஒரு வீடும், பகுதியாக 4 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் பகுதியாக ஒரு வீடும் என மொத்தம் 6 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை 12 நாட்களில் 65 வீடுகள் பகுதியாகவும், 12 வீடுகள் முழுமையாகவும் என மொத்தம் 77 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story