கரூரில் ௨-வது நாளாக கனமழை
கரூரில் கனமழை பெய்ததது.
கனமழை
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூரில் 2-வது நாளாக பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இரவு 7.50 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது.இந்த மழையானது கரூர், தாந்தோன்றிமலை, காந்திகிராமம், சுங்ககேட், பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கனமழையாக பெய்தது. இதனால் பணி முடிந்து இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். சிலர் குடைபிடித்து சென்றதை காணமுடிந்தது. இந்த மழையின் காரணமாக கரூர் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த கனமழையினால் கரூரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம், கூலக்கவுடனூர், கந்தம்பாளையம், மூலிமங்கம்,காகிதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை சுமார் அரைமணி நேரம் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றன. கரூர் மாவட்டத்தில் 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- கரூர்-12, அரவக்குறிச்சி-15, அணைப்பாளையம்-3, க.பரமத்தி-1.6, குளித்தலை-8.2, தோகைமலை-2, கிருஷ்ணராயபுரம்-17, மாயனூர்-16, பஞ்சப்பட்டி-3.2, கடவூர்-24.2, பாலவிடுதி-25.4, மைலம்பட்டி-3.