கொட்டி தீர்த்த கனமழை


தஞ்சையில் காலையில் வெயில் கொளுத்தி வந்தநிலையில் மாலையில் கனமழை கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் காலையில் வெயில் கொளுத்தி வந்தநிலையில் மாலையில் கனமழை கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெயிலின் தாக்கம்

வங்கக்கடலில் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 19-ந் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இருந்தாலும் தஞ்சை மாவட்டத்தில் கோடை காலத்தை நினைவுபடுத்தும் வகையில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.

இடையில் அவ்வப்போது லேசாக மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. தஞ்சை மாநகரில் நேற்றுகாலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது.

மாலை 6 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு வந்ததுடன் காற்றும் வேகமாக வீச தொடங்கியது. இதனால் மழை பெய்யும் என அலுவலக பணி, பள்ளிக்கூட பணியை முடித்தவர்கள் வேக, வேகமாக தங்களது வீடுகளை நோக்கி சென்றனர். மாலை 6.20 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறியது. தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.

மக்கள் மகிழ்ச்சி

இந்த மழை 1 மணிநேரம் நீடித்தது. பின்னர் கனமழை நின்றாலும் தொடர்ந்து விட்டு விட்டு லேசாக மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் திடீரென பெய்த மழையினால் நனைந்தவாறு வீடு திரும்பினர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

தஞ்சை மாநகரில் காலையில் வெயில் கொளுத்தி வந்தநிலையில் மாலையில் கொட்டி தீர்த்த மழையால் வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சி காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மின்சாரம் துண்டிப்பு

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை முதல் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு விடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கல்லூரி, பள்ளி முடிந்து வந்த மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டு வீடுகளுக்கு சென்றனர்.

கனமழையால் வல்லம்- ஆலக்குடி மற்றும் மருத்துவக்கல்லூரி சாலை புறவழிச்சாலை பாலம் அருகே மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மழை காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


Related Tags :
Next Story