வேதாரண்யத்தில் கொட்டித்தீர்த்த கனமழை
வேதாரண்யத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
கொட்டித்தீர்த்த கனமழை
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, கோடியக்காடு, வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்தநிலையில் வேதாரண்யம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது.
கோவிலில் தண்ணீர் தேங்கியது
வேதாரண்யம் பகுதியில் கடந்த 22-ந் தேதி இரவு 2 மணி நேரம் கன மழை பெய்தது. இதைப்போல நேற்று இரவு சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. கடந்த 2 நாட்களில்16 செ.மீ மழை பெய்து உள்ளதால் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் துர்க்கையம்மன் சன்னதியில் தண்ணீர் தேங்கி உள்ளது.மேலும் குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அகஸ்தியன்பள்ளியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் உப்பு ஏற்றுமதி பணியும் அடியோடு முடங்கி உள்ளது. தொடர் மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.