நீலகிரி மலைப்பகுதியில் கனமழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீலகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
2½ லட்சம் ஏக்கர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணை உள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், அணையின் 9 மதகுகள் மூலம் பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.
கன மழை
அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த 3-ந் தேதி காலை 9 மணிஅளவில் 102 அடியை எட்டியது. பொதுப்பணித்துறை விதிமுறைப்படி வருகிற நவம்பர் மாதம் இறுதி வரை 102 அடிதான் அணையில் தண்ணீர் தேக்க வேண்டும். இதனால் கடந்த 3-ந் தேதி அணையில் இருந்து உபரிநீர் மேல் மதகு மற்றும் கீழ் மதகு வழியாக பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
25 ஆயிரம் கன அடி தண்ணீர்
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 900 கன அடி வந்தது. இதனால் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து உபரி நீராக வினாடிக்கு 25 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. அதே வேளையில் கடந்த 3-ம் தேதியில் இருந்து அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக நீடித்து வருகிறது.
நீலகிரி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றின் மூலம் உபரி நீராக திறக்கப்படுவதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.