கனமழை எச்சரிக்கை: சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளது என்று நீலகிரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி வரை 3 நாட்கள் கன மழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையின்போது மாவட்டத்தில் உள்ள அபாயகரமான பகுதிகள், மழை நீர் பாதிப்புகள் ஏற்படும் இடங்கள், சாலைகள் சேதம் அடையும் பகுதிகள், கனமழை பெய்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது மற்றும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக நிவாரண பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள 3,500 முன் களப்பணியாளர்களும், 200 தன்னார்வலர்களும், தீயணைப்புத்துறை சார்பாக சுமார் 25 வாகனங்களும், 100 பொக்லைன் எந்திரங்களும், 25 ஆயிரம் மணல் மூட்டைகளும், சுகாதாரத்துறை சார்பாக டாக்டர்கள் உள்பட பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளது.
மேலும் 18, 19, 20-ந் தேதி இன்று முதல் 3 நாட்கள் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். அப்படியே அவர்கள் வந்தாலும் பாதுகாப்பாக வர வேண்டும். இந்த 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்தாலும் அவர்கள் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.