கயத்தாறு அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை:பப்பாளி-கொய்யா மரங்கள் வேரோடு சாய்ந்தன


கயத்தாறு அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை:பப்பாளி-கொய்யா மரங்கள் வேரோடு சாய்ந்தன
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் பப்பாளி-கொய்யா மரங்கள் வேரோடு சாய்ந்தன.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு பப்பாளி, கொய்யா மரங்கள் வேரோடு சாய்ந்தன.

சூறைக்காற்றுடன் மழை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கடம்பூர், ராஜாபுதுக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் சூறைக்காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. குறிப்பாக விவசாய தோட்டங்களில் பப்பாளி, கொய்யா உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்து விழுந்தும் நாசம் அடைந்தன.

கொட்டகை சரிந்தது

கயத்தாறு அருகே திருமலாபுரத்தை சேர்ந்த ஆசிரியர் சுப்புராஜ் தனது தோட்டத்தில் பப்பாளி பயிரிட்டு உள்ளார். அவை நன்கு வளர்ந்து காய்த்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. இந்த நிலையில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு ஏராளமான பப்பாளி மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன. இதனால் பப்பாளி காய்கள் சிதறிக் கிடந்தன.

சூறைக்காற்று வீசியபோது அங்கிருந்த தொழிலாளி மந்திரம் அங்கு அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் அமர்ந்து இருந்தார். அப்போது திடீரென கொட்டகை சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் காயம் எதுவும் இன்றி தப்பினார்.

இழப்பீடு

அதே பகுதியை சேர்ந்த விவசாயி கனகராஜ் தனது தோட்டத்தில் நாட்டு கொய்யா பயிரிட்டு உள்ளார். அங்கும் ஏராளமான கொய்யா மரங்கள் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்து உள்ளன.

சூறைக்காற்றுக்கு பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சேதத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நெல்லை

நெல்லை மாவட்டத்திலும் நெல்லை, பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. பாளையங்கோட்டை பகுதியில் 10 மில்லி மீட்டர், நெல்லை, பாபநாசம் பகுதிகளில் தலா ஒரு 1 மி.மீ., மணிமுத்தாறு பகுதியில் 0.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

இதேபோல் தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணை பகுதியில் 2 மி.மீ. மழை பெய்துள்ளது.

----


Next Story