பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை
திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
கொட்டித்தீர்த்த கனமழை
திண்டுக்கல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று காலை இருந்தே சுட்டெரிக்கும் வெயில் வாட்டியது. மதியத்துக்கு பிறகு வானில் கருமேக கூட்டம் திரண்டது. இதற்கிடையே மாலை சுமார் 4 மணிக்கு சாரல் மழை பெய்தது.
இந்த சாரல் மழை ஒருசில நிமிடங்கள் மட்டுமே பெய்ததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் மாலை 6.30 மணிக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை, சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் கொட்டி தீர்த்தது. அதன்பின்னரும் 15 நிமிடங்கள் சாரல் மழை பெய்தது. இதனால் திண்டுக்கல் நாகல்நகர் ஆர்.எஸ்.சாலை, ஏ.எம்.சி.சாலை, காமராஜர் சிலை பகுதி உள்பட பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஊர்ந்து சென்ற வாகனங்கள்
இதேபோல் திண்டுக்கல் நேருஜிநகர் உள்பட ஒருசில இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து சென்றன. மேலும் திண்டுக்கல் மலைக்கோட்டையில் திடீர் நீர்வீழ்ச்சி உருவானது.
மலைக்கோட்டையில் அருவி போன்று தண்ணீர் கொட்டியதை அந்த வழியாக சென்ற மக்கள் கண்டுகளித்தனர். முன்னதாக மழையின் போது பலத்த காற்று வீசியதால் திண்டுக்கல்லில் மின்சாரம் தடை செய்யப்பட்டது.
நிலக்கோட்டை, கொடைரோடு
இதேபோல் நிலக்கோட்டை, கொடைரோடு, அம்மையநாயக்கனூர், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் வேடசந்தூர், எரியோடு சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.