இடி, மின்னலுடன் பலத்த மழை
தலைவாசல்:-
தலைவாசல் பகுதியில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று பகல் வேளையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலை வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் சிறிது நேரத்தில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழை, காற்று காரணமாக சிறுவாச்சூர், புத்தூர், ஊனத்தூர், வரகூர், சார்வாய்புதூர், தலைவாசல், மணிவிழுந்தான், காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றால் கடைகள், வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. மேலும் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சாய்ந்தன. மரங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. இந்தநிலையில் மின்னல் தாக்கியதில் சார்வாய் கிராமத்தில் தென்னை மரத்தில் தீப்பிடித்தது. மேலும் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள், நேற்று பெய்த மழையால் சிறிது நிம்மதி அடைந்தனர்.