இடி- மின்னலுடன் பலத்த மழை
பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது சூறைக்காறு வீசியதில் மின் கம்பங்கள் சாய்ந்தன.
சூறைக்காற்றுடன் மழை
பேரணாம்பட்டு பகுதியில் நேற்று இடி- மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூறை காற்று வீசியதில் பேரணாம்பட்டு - வீ.கோட்டா சாலையில் இருந்த டிரான்ஸ்பார்மரின் கம்பங்கள் உடைந்து டிரான்ஸ்பார்மர் மீது விழுந்து சேதமடைந்தது.
இதே போன்று மசிகம், பக்காலப்பல்லி, பத்தலப் பல்லி உள்ளிட்ட கிராமங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பத்தலப் பல்லி கிராமத்தில் அருண் பிரசாத் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் 300-க்கு மேற்பட்ட வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து சேதமடைந்தன. எருக்கம்பட்டு கிராமத்தில் பாலாஜி என்பவரது நிலத்தில் 25 மா மரங்கள் முறிந்து சேதமடைந்தன. ஷர்மிளா என்பவருடைய மாந்தோப்பில் 5 மாமரங்கள் முறிந்து சேதமடைந்தன.
வாழை மரங்கள் சேதம்
ஆனந்தன், மேகநாதன் ஆகியோரது நிலத்தில் வாழை மரங்கள், சிட்டி பாபு, ஹரிநாத் பாபு ஆகியோரது மாமரங்களும் முறிந்து சேதமடைந்தன. இந்த சூறை காற்றினால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 5 டன் மாங்காய்கள் கீழே சிதறி விழுந்தன.
பத்தலப் பல்லி கிராமத்தில் ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை என்பவருடைய விவசாய நிலத்தில் உள்ள வீட்டின் மீது புளியமரம் சாய்ந்து விழுந்தது. வீட்டில் யாருமில்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை. கஸ்தூரி என்பவருடைய ஓட்டு வீட்டின் கூரை, சிமெண்டு கூரை காற்றில் பறந்தது.
சூறை காற்றினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து வருவாய்த் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.