கரூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
கரூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கரூர்,
பலத்த மழை
கரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்தநிலையில் கரூரில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலை 5.15 மணியளவில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.இந்த மழையானது கரூர், தாந்தோன்றிமலை, காந்திகிராமம், பசுபதிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். இந்த மழையால் கரூர் மேற்கு பிரதட்சணம் ரோடு, ராமகிருஷ்ணபுரம் ரோடு, வடக்கு பிரதட்சணம் ரோடு, ஆசாத் ரோடு, ஜவகர்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
நொய்யல்-சின்னதாராபுரம்
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குறுக்குச்சாலை, அத்திப்பாளையம், குப்பம், குந்தாணிபாளையம், நத்தமேடு, உப்புபாளையம், புன்னம்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.சின்னதாராபுரம், எல்லைமேடு, எலவனூர், காசிபாளையம், அணைபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை பலத்த மழை பெய்தது.
அரவக்குறிச்சி-வேலாயுதம்பாளையம்
அரவக்குறிச்சி பகுதிகளில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது. மாலை 3 மணிக்கு திடீரென்று கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் அரைமணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் ஓடியது. பின்பு இரவு விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.வேலாயுதம்பாளையம், கூலக்கவுடனூர், கந்தம்பாளையம், மூலிமங்கம்,காகிதபுரம், புதுகுறுக்கு பாளையம், செக்குமேடு, மூர்த்திபாளையம், புகழூர்,நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம்,தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் இரவு 7 மணியில் இருந்து 7.30 மணி சுமார் அரைமணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.