கோவில்பட்டியில் இடி-மின்னலுடன் பலத்த மழை
கோவில்பட்டியில் புதன்கிழமை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நேற்று மதியம் முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 4.30 மணிக்கு திடீரென்று இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், ரோடுகள், தெருக்கள், ஓடைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது.
இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க வழிப்பாதையில் மழை நீர் தேங்கியதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதே போல புது ரோட்டில் பெரிய மரம் ஒன்று ரோட்டில் சரிந்து விழுந்ததால், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த லோடு ஆட்டோ ஒன்று சேதமடைந்தது. தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின்சாரத்தை துண்டித்தனர். நகரசபை சுகாதாரப் பணியாளர்கள் ரோட்டில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப் படுத்தினர்.
இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோவில்பட்டியில் நேற்று மாலையில் 48 மி.மீ. மழை பதிவானதாக தாலுகா அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது.