மதுரையில் இடி, மின்னலுடன் பலத்த மழை -சாலைகளில் வெள்ளப்பெருக்கு


மதுரையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

மதுரை


மதுரையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

பலத்த மழை

மதுரையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்தது. இரவிலும் அதே வெப்பசலனம் காணப்பட்டதால், மதுரை மக்கள் இரவு நேரத்தில் தூக்கத்திற்காக கடும் அவதியடைந்தனர். இதனால் அவர்கள் மழைக்காக ஏங்கி காத்திருந்தனர். இதற்கிடையே, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று காலையிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி இருந்தது. இரவு 7 மணியளவில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டது. அதன்படி பலத்த இடி மின்னலுடன் கன மழை பெய்ய தொடங்கியது.

சாலையில் வெள்ளப்பெருக்கு

இந்த மழையானது, சுமார் ஒரு அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. குறிப்பாக பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. நேற்று விடுமுறை தினம் என்பதாலும், மழையின் காரணமாகவும் நகரின் பல இடங்களில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்று காலை 11 மணி 12 மணிவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் 12.30 மணிக்கு மேல் 3 மணி வரை அனல் காற்று வீசியது. அதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் மாலை 6.20 மணிக்கு இடி மின்னலுடன் மழை கொட்டியது. அதில் பூமி நனைந்தது. இந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தெருக்கள் மட்டுமல்லாது வீடுகள், அலுவலகங்கள் இருளில் மூழ்கின.திருப்பரங்குன்றம் சுற்று வட்டாரத்தில் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி (ஐஸ்கட்டி) மழை பெய்தது. கத்திரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் வருகின்ற மே மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது. மேலும் 29-ந் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்த நிலையில் நேற்று மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

மரம் சாய்ந்தது

டி..கல்லுப்பட்டி பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான கோடை வெப்பம் சுட்டெரித்தது. .இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை டி.கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லமரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு நல்லமரம் கிராமப் பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளின் தகரங்கள் காற்றில் பறந்தன. மேலும் அங்குள்ள தெப்பம் அருகே உள்ள பழமையான இச்சி மரம் காற்றுக்கு வேரோடு கீழே விழுந்து சாய்ந்தன. இந்த மழையால் கோடை விவசாயம் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு

மதுரை திருநகர் பகுதியில் நேற்று மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் அண்ணா பூங்கா மேற்கு வாசல் அருகே ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு வேப்பமரம் முறிந்து. உயர் அழுத்த மின் வயரை உரசியபடி வேரோடு ரோட்டில் சாய்ந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாதபடி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இது குறித்து தகவல் அறிந்ததும், திருப்பரங்குன்றம் தீயணைப்புத்துறை வீரர்கள் மின்சார வாரிய ஊழியர்கள் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் ரோட்டில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.மின்வயர்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை தடையை நீக்கினார்கள்..இதே போல திருப்பரங்குன்றம் கிழக்குத் தெருவில் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. அதையும் திருப்பரங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story