மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியது
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால், விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியது.
மூங்கில்துறைப்பட்டு,
பலத்த மழை
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு, சவேரியார் பாளையம், மைக்கேல்புரம், மணலூர், லக்கிநாயக்கன்பட்டி, ரங்கப்பனூர், புளியங்கொட்டை, புதுப்பட்டு, வடகீரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை கடும் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் இளையாங்கண்ணி கூட்டு ரோடு மற்றும் மணலூர் பகுதிகளில் தாழ்வான இடங்கள் மற்றும் விளை நிலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்த மழையால் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழை காரணமாக வடகீரனூர் அரசு உதவி பெறும் பள்ளி முன்பு மழைநீர் சூழ்ந்தது. இதனால் நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் பெரும் சிரமங்களுக்கிடையே தேங்கி நின்ற தண்ணீரில் நடந்தபடி வகுப்பறைகளுக்கு சென்றதை காணமுடிந்தது.