பெரம்பலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை
பெரம்பலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால் நேற்று பகல் நேரத்தில் கடுமையாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் பெரம்பலூரில் திடீரென்று இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. மேலும் பலத்த காற்றும் வீசியது.
சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. மழை பெய்யும் போது மின்சாரம் தடைப்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
பின்னர் விட்டு, விட்டு மழை பெய்தது. சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மழைநீருடன் கழிவு நீர் கலந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.