பலத்த மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது


பலத்த மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது
x

வேலூரில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

வேலூர்

வேலூரில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பலத்த மழை

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது.

சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் இடைவிடாது மழை பெய்தது. அதன்பின்னர் நள்ளிரவுக்கு பிறகும் மழை பெய்து கொண்டே இருந்தது.

இந்த மழையால் வேலூர் ஆற்காடு சாலை, அண்ணாசாலை உள்பட பல்வேறு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. வாகன ஓட்டிகள் தண்ணீரில் சிரமப்பட்டு ஓட்டிச்சென்றனர்.

வேலூர் மாநகரில் பெய்த மழையினால் மாங்காய் மண்டி பகுதி வழியாக செல்லும் நிக்கல்சன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

மக்கள் தவிப்பு

அதன் காரணமாக சம்பத்நகர், கொணவட்டம் திடீர் நகர், கன்சால்பேட்டை, காந்திநகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமப்பட்டனர்.

வாளிகள் மூலம் தண்ணீரை இறைத்து அகற்றும் நடவடிக்கையில் அவர்கள் பல மணி நேரம் ஈடுபட்டும் தண்ணீர் வெளியேறாததால் இரவு முழுவதும் வீடுகளில் அவர்கள் தூங்க முடியாமல் தவித்தனர். பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

இதேபோல கால்வாய் அருகே அமைந்துள்ள மாங்காய் மண்டி வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்தது. அங்கு குளம்போல் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.

இதனால் வியாபாரிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். அங்கிருந்த கடைகளில் பழங்கள் தண்ணீரில் மிதந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார், நகர்நல அலுவலர் முருகன் (பொறுப்பு) மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர்.

மேலும் முதல்கட்டமாக மாங்காய் மண்டியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் வகையில் அங்குள்ள கால்வாயின் ஒரு பகுதியை உடைத்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கால்வாயின் ஒரு பகுதி உடைக்கப்பட்ட பின்னர் தண்ணீர் வெளியேற தொடங்கியது.

இதேபோல் கோட்டையின் உள் பகுதியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் முன்பு உள்ள மைதானத்திலும் குளம்போல் மழைநீர் தேங்கி காணப்பட்டது. சில இடங்களில் தேங்கிய மழைநீரில் சிறுவர்கள் விளையாடினர்.

மழை அளவு

வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

குடியாத்தம் 9.2, மேலாலத்தூர் 13.2, அம்முண்டி 18.4, வேலூர் 28.7, காட்பாடி 37, பொன்னை 41.6.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.


Next Story