சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை...!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டி நிலவுகிறது.
இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நாளைக்குள் (சனிக்கிழமை) நகர்ந்து வரக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகனமழை வரை பெய்யக்கூடும். இதனால் இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது
இதேபோல், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், வள்ளூவர் கோட்டம், நுங்கம்பாக்கம்,அண்ணாசாலை, ஆலுந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம் கூடுவாஞ்சேரி, பம்மல், அனக்காப்புதூர், மாங்காடு, அடையார், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகரில் நீடிக்கும் கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.






