ஈரோட்டில் கனமழை:சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து துண்டிப்பு


ஈரோட்டில் கனமழை:சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து துண்டிப்பு
x

ஈரோட்டில் பெய்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடியது

ஈரோடு

ஈரோட்டில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நாடார்மேடு பகுதியில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கனமழை

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக மாலையில் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும், வெப்ப சலனம் அதிகமாக காணப்பட்டது. மாலை 5 மணிஅளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. அதைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணிநேரம் கனமழை கொட்டியது.

வீரப்பன்சத்திரம், பஸ்நிலையம், பெரியவலசு, பன்னீர்செல்வம் பூங்கா, சூரம்பட்டி, கொல்லம்பாளையம், ரங்கம்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, கொங்கலம்மன் கோவில் வீதி, முனிசிபல் காலனி, பெருந்துறைரோடு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதேபோல் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியவர்கள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது.

மரம் முறிந்தது

பலத்த மழை காரணமாக ஈரோடு நாடார்மேடு கெட்டிநகர் பகுதியில் சாஸ்திரிநகர் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டித்தது. மேலும் மின் ஒயர்களும் அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மாலை 6 மணிஅளவில் இருந்து மின் வினியோகம் தடைபட்டது. நள்ளிரவிலும் மின் வினியோகம் இல்லாததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதேபோல் ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

கோபுரம் சேதம்

புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 3 மணியி்ல் இருந்து 4 மணி வரை 1 மணி நேரம் இடி-மின்னலுடன் பலத்தமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் புஞ்சைபுளியம்பட்டி அருகே பொன்னம்பாளையத்தில் உள்ள பழமையான மதிப்பாபுரி அம்மன் கோவில் கோபுரம் சேதமடைந்தது. மேலும் கோபுரத்தில் உள்ள சில சாமி சிலைகளும் சேதமானது. இதுதவிர கோபுரத்தில் குடியிருந்த 4 கிளிகள் மின்னல் தாக்கி செத்தன.


Next Story