கூடலூரில் பலத்த மழை:சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர் :பொதுமக்கள் அவதி
கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. கூடலூர் மெயின்பஜார் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதில் பெரும்பாலானோர் கழிவுநீர் கால்வாய்களை மறித்து கட்டிடங்கள் கட்டி உள்ளனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் சாக்கடை கால்வாயில் செல்ல வழியில்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை கம்பத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் மெயின்பஜார் வீதி, பூக்கடைதெரு, கிழக்கு காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கால்வாயில் செல்ல வழியில்லாததால் சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் மற்றும் கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.