தாம்பரத்தில் விடிய விடிய பலத்த மழை: வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
தாம்பரத்தில் விடிய விடிய பெய்த மழையால் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளானார்கள்.
தாம்பரம்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. மேற்கு தாம்பரம் பகுதியில் 11.4 சென்டிமீட்டர் அளவுக்கு கன மழை பெய்துள்ளது. இதன் காரணமாக தாம்பரத்தில் மேற்கு பகுதியில் இருந்து கிழக்குப் பகுதிக்கு செல்லும் ெரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து தடைப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் சுற்றி சென்று வந்தன.
அதேபோல பழைய ஜி.எஸ்.டி. சாலை, குரோம்பேட்டை, பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலை, செம்பாக்கம், திருமலை நகர், பெருங்களத்தூர் ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ - மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
வீடுகளை சூழ்ந்த மழைநீர்
செம்பாக்கம், திருமலை நகர், மகா கணபதி தெரு, மகா சக்தி நகர், மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் பரிதவித்தனர்.
இதுபற்றி அறிந்த தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா உடனடியாக மாநகராட்சி ஊழியர்களை மழை நீர் தேங்கி நின்ற பகுதிகளுக்கு அனுப்பி மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ரெயில்வே சுரங்கப்பாதை மற்றும் சாலைகளில் தேங்கி நின்ற மழைநீர் சுமார் ஒரு மணிநேரத்தில் அகற்றப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து சீரானது.
மடிப்பாக்கம்
அதேபோல் மடிப்பாக்கம் குபேர நகர் பகுதியில் பல்வேறு சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர்.
மேலும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் தேங்கியிருக்கும் மழைநீரை கடந்து செல்வதில் சிரமத்துக்கு உள்ளாகினர்.
மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடிக்கப்படாத நிலையில் கால்வாய்கள் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
கிளாம்பாக்கம்
அதே போல கிளாம்பாக்கத்தில் பெய்த மழையின் காரணமாக கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே நள்ளிரவில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.