சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை சென்னையில் 32 விமான சேவை பாதிப்பு
பலத்த சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையில் 32 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஆலந்தூர்,
சென்னை உள்பட 17 மாவட்டங்களில் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணியில் இருந்து பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
கோடை வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்தது. மீனம்பாக்கம் பகுதியில் 93 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பெய்தது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 32 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
விமானங்கள் தாமதம்
அதன்படி சென்னையில் இருந்து டெல்லி, புனே, மலேசியா, சிங்கப்பூர், பாங்காக், கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய 13 விமானங்கள் கனமழையால் புறப்பட்டு செல்லவில்லை. வானிலை சீரானதும் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
இதேபோல் மலேசியா, ஐதராபாத், டெல்லி, பாங்காக் உள்பட 15 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் வானத்தில் வட்டமிட்டன. வானிலை சீரானதும் தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு அந்த விமானங்கள் சென்னையில் தரை இறங்கின.
திருப்பிவிடப்பட்டன
மேலும் ஜெர்மனி நாட்டின் பிராங்பார்ட்டில் இருந்து சென்னை வந்த விமானமும், தோகாவில் இருந்து வந்த விமானமும் சென்னையில் தரையிறங்க முடியாததால் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.
அதேபோல் மும்பையில் இருந்து வந்த விமானமும், துபாயில் இருந்து வந்த விமானமும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. சென்னையில் வானிலை சீரானதும் 4 விமானங்களும் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தன.