தமிழகத்தின் சில மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


தமிழகத்தின் சில மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x

தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு லேசானது முதல் கன மழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை:

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் லேசானது முதல் கன மழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை (திங்கட்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

புதன்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், 'சிறுகமணி கே.வி.கே. 3 செ.மீ., விருதுநகர் 1 செ.மீ.' மழை பெய்துள்ளது.


Next Story