அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம்: சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் எதிரொலியாக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சூரமங்கலம்:
ராணுவத்துக்கு ஆட்கள் சேர்க்கும் புதிய திட்டமான அக்னிபத் திட்டத்துக்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் பல இடங்களில் போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதனால் ரெயில், பஸ்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதைத்தொடர்ந்து சேலம் ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ரெயில்,ரெயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். அதன்பேரில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் நுழைவு வாயில் முன்பு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார், ெரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுமித் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் யாரேனும் சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றித்திரிகின்றனரா? என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.