பழுதாகி நின்ற லாரியால் கடும் போக்குவரத்து நெரிசல்
நாகர்கோவிலில் ஒழுகினசேரி பாலத்தில் பழுதாகி நின்ற லாரியால் சுமார் 2 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் ஒழுகினசேரி பாலத்தில் பழுதாகி நின்ற லாரியால் சுமார் 2 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
பழுதாகி நின்ற லாரி
நாகர்கோவில் மாநகரில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காலையில் அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், மாலையில் வீடு திரும்புகிறவர்கள் சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் சிக்கி திணறி வருகிறார்கள். தற்போது சாலைகளும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் இந்த நெருக்கடி அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் நாகர்கோவில் ஒழுகினசேரி பாலத்தில் காலையில் லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனால் நாகர்கோவில்- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த வாகனங்கள் நகருக்குள் வர முடியாத நிலை ஏற்பட்டது.
போக்குவரத்து நெருக்கடி
ஒழுகினசேரியில் இருந்து வெள்ளமடம் வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன. காலை 6.45 மணிக்கு தொடங்கிய போக்குவரத்து நெருக்கடி சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது. நெல்லையில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்புதூர், இறச்சக்குளம், புத்தேரி வழியாக நாகர்கோவில் வந்தன. இதில் புத்தேரியை கடந்து பாலமோர் ரோட்டில் குழாய் பதிப்பு பணிமுடிந்து சாலை குண்டும், குழியுமாக உள்ளது.
இங்கு அதிகளவில் பஸ்களும், கனரக வாகனங்களும் வந்ததால் புத்தேரி மேம்பாலம் முதல் வடசேரி அண்ணா சிலை சந்திப்பு வரையிலான பாலமோர் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. காலை நேரம் என்பதால் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய மாணவ-மாணவிகளும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியவர்களும் மிகவும் அவதியடைந்தனர்.
ஒழுகினசேரியில் பழுதான டாரஸ் லாரி மாற்றப்பட்ட பின்னரே நிலைமை சீரானது. இந்த நெருக்கடி காரணமாக பாலமோர் ரோடு, மீனாட்சிபுரம், வடசேரி பள்ளிவாசல் ரோடு பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.