கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்; 3 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் வாகனங்களில் படையெடுத்ததால் நகரில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் வாகனங்களில் படையெடுத்ததால் நகரில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள்
'மலைகளின் இளவரசி' யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தருகின்றனர். கொடைக்கானலில் தற்போது குளிர் மற்றும் உறைபனி சீசன் நிலவுகிறது. இரவு மற்றும் அதிகாலை வேளையில் கடும் பனிப்பொழிவும், பகல் நேரத்தில் இதமான சூழலும் நிலவுகிறது. இந்த சீதோஷ்ண சூழலை அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் தற்போது அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா இடங்களுக்கு பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுடன் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கொடைக்கானலுக்கு கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
போக்குவரத்து நெரிசல்
இந்தநிலையில் இன்று காலை சுற்றுலா வேன், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, ஏரிச்சாலை, கலையரங்கம், மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி, போக்குவரத்துக்கழக பணிமனை, 7 ரோடு சந்திப்பு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த வாகனங்கள் யாவும் நெரிசல் காரணமாக சுற்றுலா இடங்களுக்கு ஊர்ந்தபடி சென்றன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்திற்கு செல்லமுடியாமல் அவதியடைந்தனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் போதிய போக்குவரத்து போலீசார் இல்லாததால் விடுமுறை நாட்களில் நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும் என்று அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்
இருப்பினும் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பைன்மரக்காடு, பில்லர் ராக், மோயர் பாயிண்ட், குணா குகை உள்ளிட்ட பகுதிகளில் தரையிறங்கிய மேகக்கூட்டத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்ததுடன், தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதேபோல் வெள்ளி நீர்வீழ்ச்சி, தேவதை அருவி, பியர் சோழா அருவி, பாம்பார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளையும் பார்த்து ரசித்தனர். மேலும் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.