மலைப்பாதையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள்
ஆபத்தை உணராமல் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதற்கு தடை விதிக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊட்டி
ஆபத்தை உணராமல் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதற்கு தடை விதிக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கம்
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாகவும், கோவை உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து குன்னூர், கோத்தகிரி வழியாகவும் வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குறிப்பாக சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருவதால், ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இங்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கனரக வாகனங்கள்
இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அந்த மலைப்பாதையில் லாரிகள் உள்பட கனரக வாகனங்களை நிறுத்தி கழுவுகின்றனர். இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் அங்கு வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூரில் இருந்து பர்லியாறு வரை சாலையோரம் நீரூற்றுகள் இருக்கும் இடங்களில் கனரக வாகனங்களை நிறுத்தி டிரைவர்கள் கழுவுகின்றனர். செங்குத்தான மேடு, வளைவுகள் நிறந்த மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி சுமார் ஒரு மணி நேரம் வரை கழுவிக்கொண்டு இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தடை விதிக்க வேண்டும்
இது தவிர வாகனங்களை முந்தி செல்ல முயலும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சமவெளி பகுதியாக இருந்தால் கூட பரவாயில்லை, மலைப்பிரதேசம் என்பதால் அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி கழுவ சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.