வேலூர் மாநகரில் பகலில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும்


வேலூர் மாநகரில் பகலில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும்
x

வேலூர் மாநகரில் பகலில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர்

வேலூர் மாநகரில் பகலில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கனரக வாகனங்கள்

வேலூர் மாநகரில் வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் முக்கிய சந்திப்பு பகுதிகளில் திடீரென போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

நகர சாலைகளும் குறுகியதாக உள்ளதால் 'பீக்' அவர்சில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கடந்த 11-ந்தேதி முதல் நகருக்குள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக சரக்கு வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து வேலூர் மாநகருக்குள் நுழையும் அனைத்து கனரக சரக்கு வாகனங்கள் வேலூர் கிரீன் சர்க்கிள் சாலையில் இருந்து அப்துல்லாபுரம் விமான நிலையம் வழியாக ஊசூர், அரியூர், சாத்துமதுரை, திருவண்ணாமலை மார்க்கமாக செல்ல வேண்டும்.

வேலூர் பழைய பைபாஸ் சாலை மற்றும் பழைய காட்பாடி சாலை ஆகியவற்றில் கனரக சரக்கு வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி வரும் அனைத்து கனரக சரக்கு வாகனங்கள் சாத்துமதுரை, அரியூர், ஊசூர் வழியாக அப்துல்லாபுரம் விமான நிலையம் அடைந்து அவரவர் வழித்தடங்களில் பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றில் பறந்த உத்தரவு

ஆனால் இந்த உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நேரத்தில் மாநகருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்வது வாடிக்கையாகவே உள்ளது.

இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக காட்பாடி பகுதியில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர்.

காலை, மாலை வேளையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்துக்கு அலுவலர்கள் தங்களது அலுவலகத்துக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

எனவே, தடை செய்யப்பட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் நகரில் நுழைவதை தடுக்க போக்குவரத்து போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீறி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story