அந்தியூர் பகுதியில் நடந்தசிறு விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்


அந்தியூர் பகுதியில் நடந்தசிறு விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
x

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அந்தியூர் பகுதியில் நடந்த சிறு விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஈரோடு

அந்தியூர்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அந்தியூர் பகுதியில் நடந்த சிறு விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

விசைத்தறிகள்

அந்தியூர், தவுட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. லுங்கி, துண்டு, கைக்குட்டைகள் உள்ளிட்ட ரகங்கள் இங்குள்ள விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அதேபோல் 1,000-த்துக்கும் மேற்பட்ட சிறு விசைத்தறி கூடங்களும் உள்ளன. சிறு விசைத்தறி கூடங்களை நடத்துபவர்கள் பெரிய விசைத்தறி உரிமையாளர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் துணிகள் உற்பத்தி செய்து கொடுத்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.

2-வது நாளாக போராட்டம்

இதற்கிடையே சிறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பெரிய விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 20 சதவீத கூலி உயர்வு கேட்டு நேற்று முன்தினம் முதல் அந்தியூர் பகுதியில் உள்ள சிறு விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாகவும் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இதன்காரணமாக சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

வாபஸ்

இந்த நிலையில் நேற்று மதியம் அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் சிறு விசைத்தறி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. விசைத்தறி உற்பத்தியாளர் சங்கத்தின் வட்டார செயலாளர் மலைச்சாமி, தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.

பேச்சுவார்த்தையில் சிறு விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது. இதை சிறு விசைத்தறி உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டதால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர்கள் அறிவித்தனர்.


Next Story