நீலகிரியில் விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம்
நீலகிரி மாவட்டத்தில் விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
புகைப்பட கண்காட்சி
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் புகைப்பட கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுற்றுலாத்தறை மூலம் ஊட்டி படகு இல்ல வளாகத்தில் புதிதாக சாகச விளையாட்டுகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. வருகிற கோடை சீசனுக்குள் இங்கு சாகச விளையாட்டுகள் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்தநிலையில், ஏற்காடு மற்றும் வால்பாறையில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஹெலிகாப்டர் சுற்றுலா
அதேபோல், நீலகிரி மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் விரைவில் அறிமுகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வு பணிகள் அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்தை கொண்டு மேற்கொள்ளப்படும். மேலும் ஊட்டி ஏரியில் மிதக்கும் உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில், 30 பேர் அமர்ந்து உணவு உட்கொள்ளும் வகையில் அமைக்கப்பட வசதி ஏற்படுத்தப்படுகிறது.
இதில் பிறந்த நாள் உள்பட பல்வேறு விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்படும். இதன் மூலம் பலரும் இந்த மிதக்கும் உணவகத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் குறைகளை அறிய பொதுஇடத்தில் புகார் பெட்டி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கலெக்டர் அம்ரித் உடனிருந்தார்.