ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
விழுப்புரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடம் மற்றும் விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களில் சாலை பாதுகாப்பு விதிகள், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நேற்று காலை ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி விழுப்புரத்தில் நடைபெற்றது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், அகிலாண்டம், ஏட்டு வேல்முருகன் மற்றும் இருசக்கர வாகன பழுதுபார்ப்போர்கள் பலர் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தவாறு பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் முடிவடைந்தது.