இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு 26-ந்தேதி முதல் 'ஹெல்மெட்' கட்டாயம்


இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு 26-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்
x

ஹெல்மேட்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் வருகிற 26-ந்தேதி முதல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 -ம் ஆண்டில் மட்டும் 2,217 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 537 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தும், 2,327 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரு உயிர் என்பது தனிப்பட்ட நபரின் உயிர் அல்ல, அது ஒரு குடும்பத்துக்கும் சமுதாயத்துக்குமான இழப்பு, இந்த இழப்பினால் அந்த குடும்பத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. பொருளாதார சிக்கலில் சிக்கி மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த இழப்பை வாகனம் ஓட்டும் போது 'ஹெல்மெட்' அணிவதன் மூலம் தவிர்க்கலாம். உங்களது பாதுகாப்புக்காகவும், உங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது 'ஹெல்மெட்' அணிய வேண்டியது அவசியம்.

'ஹெல்மெட்' கட்டாயம்

வாகனம் ஓட்டுபவர் மட்டும் அல்லாது, பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கண்டிப்பாக 'ஹெல்மெட்' அணிய வேண்டும். வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் ஏற்கனவே அமலில் உள்ள மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி, தஞ்சை மாவட்டத்தில் 'ஹெல்மெட்' அணியாமல் செல்வோர் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் 'ஹெல்மெட்' டினை பயன்படுத்தி தங்கள் உயிரையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story