பக்தர்களுக்கு உதவி மையங்கள்
பழனி முருகன் கோவிலில், பக்தர்களின் நலன் கருதி 11 உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அடிவாரத்தில் செல்போன் பாதுகாப்பு மையத்தில் பக்தர்கள் செல்போனை கொடுத்து செல்ல வேண்டும். இந்த தடைக்கு வரவேற்பு இருந்தாலும் சில எதிர்ப்பும் உள்ளது.
அதாவது குழுவாக பக்தர்கள் வரும்போது மலைக்கோவிலில் பிரிந்து செல்ல நேரிடும். அப்போது செல்போன் இருந்தால், அவர்களை தொடர்பு கொண்டு சேர்ந்து விடுவார்கள். ஆனால் செல்போன் தடையால் பக்தர்கள் சேர முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு உதவுவதற்காக உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மலைக்கோவில் வெளிப்பிரகாரம், ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையத்தில் பக்தர்கள், தங்களுடன் வந்தவர்கள் பிரிந்து சென்றாலோ, அல்லது வேறு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டாலோ? தொடர்பு கொள்ளலாம். இங்குள்ள பணியாளர்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து, பிரிந்து சென்ற பக்தர்களை ஒன்று சேர்ப்பார்கள் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.