தீரர்களின் கோட்டம் திருச்சி, அதில் தலைசிறந்த கல்வி கோட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரி - மு.க.ஸ்டாலின் புகழாரம்


தீரர்களின் கோட்டம் திருச்சி, அதில் தலைசிறந்த கல்வி கோட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரி -   மு.க.ஸ்டாலின் புகழாரம்
x

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருச்சி,

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடக்கக்கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கக்கூடிய அமைச்சர் பெருமக்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். ஐந்தாறு நாட்களாக சிறிது காய்ச்சல் இருந்ததால் மருத்துவர்கள் அறிவுரையின் படி வெளியில் வரமுடியாத நிலை இருக்கின்றது.

அதனால் திருச்சியில் ஜமால் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததால் வருத்தம் அடைகிறேன். ஜமால் முகமது கல்லூரி திருச்சியில் அடையாளம் ஆகும். தீரர்களின் கோட்டம் திருச்சி, அதில் தலைசிறந்த கல்வி கோட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரி ஆகும்.

தந்தை பெரியார் அவர்களோடு தொடர்புடையவர் தான் ஜமால் கல்லூரியின் இடத்தை வழங்கியவர். ஏழைகளுக்கு உயர் கல்வி கொடுப்பதற்காக தான் ஜமால் முகமது கல்லூரி தொடங்கப்பட்டது.அதற்காக நான் அவர்களை பாராட்டுகிறேன்.

ஜமால் முகமது கல்லூரி கல்வி வழங்குவதில் 65 வது இடத்தில் இருக்கிறது. இன்னும் முன்னதாக வருவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த கல்லூரி மாணவி பரதநாட்டியத்தில் உலக சாதனை படைத்துள்ளார். டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பு நிகழ்ச்சியில் தேசிய மாணவர்படை அணிவகுப்பில் இந்த கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பை பெற்றவர்கள்.

தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில், பண்பாட்டில் சிறந்து விளங்க நான் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த ஆட்சி காலம் உயர் கல்வியின் பொற்காலமாக திகழவேண்டும். அதற்கு ஜமால் முகமது கல்லூரி செயல்பட வேண்டும். இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் உலகில் பல்வேறு நாடுகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

முன்னாள் மாணவர்கள் படிக்க முடியாத மாணவர்களுக்கு உதவி செய்வது பாராட்டுக்குறியது. விரைவில் உங்கள் கல்லூரிக்கு கட்டாயமாக வருவேன் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story