பிள்ளைகுளம் கிராமமே காணாமல் போய்விட்டது
இறால் பண்ணைகளால் பிள்ளைகுளம் கிராமமே காணாமல் போய்விட்டது என்று மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இறால் பண்ணைகளால் பிள்ளைகுளம் கிராமமே காணாமல் போய்விட்டது என்று மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறைதீர்கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவர்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்டு மீனவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:-
சேசுராஜ்: நாட்டுப்படகு மீனவர்களும், விசைப்படகு மீனவர்களும் ஒருதாய் மக்களாய் தொழில் செய்துவரும் நிலையில் ஒரு சிலர் குழப்பம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். விசைப்படகு, நாட்டுப்படகு வைத்திருப்பவர்கள், மீனவர்கள் மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். மீனவர் அல்லாமல் ஒரு அமைப்பை மட்டும் வைத்துக் கொண்டு குழப்பம் விளைவிப்பவர்களை அனுமதிக்கக் கூடாது. இலங்கையில் உள்ள படகுகளை விடுவிக்க மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜராக செல்லும் செலவினை அரசு ஏற்க வேண்டும். நாங்கள் மீன்பிடிக்கும் பகுதியில் பக்கத்து மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் புயல் ஆபத்து என டோக்கன் தர மறுக்கின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
ஜெபமாலை: ரோச்மா நகரில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க வேண்டும். கருணாமூர்த்தி: ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை தடை செய்ய வேண்டும். கடல்வளத்தை பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுப்பதாக கூறும் நிர்வாகம் கடல்வளத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை தடை செய்ய தயங்குவது ஏன்?
ஆய்வு
ஆரோக்கியதாஸ்: மாவட்டத்தில் சில அதிநவீன நாட்டுப் படகுகள் அதிக சக்திகொண்ட மோட்டார் பொருத்தி விசைப்படகுகளின் எல்லை வரை சென்று மீன்பிடிக்கின்றன. இதுபோன்ற நாட்டுப்படகுகளை ஆய்வு செய்து தடை விதிக்க வேண்டும். டோக்கன் வழங்க கூடாது. தடைக்காலத்திலும் இவ்வாறு செல்வதால் தடைக்காலம் என்பதன் பயன் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனை வரைமுறைப்படுத்த வேண்டும். மேலும், தற்போதைய என்ஜின்களுக்கு உதிரிபாகங்கள் கிடைக்காததால் வேறு என்ஜின் பொருத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
சகாயம்: மீனவர்களுக்கு நல்லது செய்வதாக நினைத்து ஆழ்கடல் படகு வழங்கினார்கள். ஆனால், நாங்கள் மீன்பிடிக்க சென்றால் அனுமதிப்பதில்லை. இலங்கை வரை கூட சென்று மீன்பிடித்துவிடலாம். ஆனால், நம் பகுதியில் சென்று மீன்பிடிக்க அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் 31 ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான கடனை கட்ட முடியாத நிலையில் கிரிமினல் வழக்கு தொடர உள்ளதாக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மீன்பிடிக்க முடியாத எங்களின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
வேதனை
எமரிட்: தடைக்காலம் முடிந்து கடலுக்குபோன எங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. 4 நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து கொண்டு குறைந்தவிலைக்கு வாங்கி எங்களை வேதனைக்கு உள்ளாக்குகின்றனர்.
வில்லியம்ஜான்சி: விதிகளை மீறி விசைப்படகுகள் கடற் கரையில் இருந்து 500 மீட்டர் கடல் எல்லைக்குள் வந்து மீன்களை அள்ளி செல்கின்றனர். கரையோர விசைப்படகுகள் மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டும். அரியான்குண்டு பகுதியில் சாலை, தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.
தஞ்சம்
இறால் பண்ணைகளால் பிள்ளைகுளம் என்ற கிராமமே சிட்டிசன் பட அத்திபட்டி கிராமம் போல காணாமல் போய்விட்டது. அங்கிருந்தவர்கள் வாழ முடியாமல் இறால்பண்ணை உரிமையாளர்களிடம் நிலங்களை கொடுத்துவிட்டு அகதிகளாக வேறு இடத்திற்கு தஞ்சமடைந்துவிட்டனர். இறால்பண்ணைகளை தடை செய்ய வேண்டும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன. இதற்கு பதிலளித்த கலெக்டர் இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என்று தெரிவித்தார்.