உணவு பொருளை அதிக விலைக்கு விற்ற கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
உணவு பொருளை அதிக விலைக்கு விற்ற கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் நவநீத்குமார். இவர் நாகர்கோவிலில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் 25 கிலோ கோதுமை மூடை ஒன்றை வாங்கினார். அதில் அதிகபட்ச விலை ரூ.850 என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதை ரூ.912-க்கு விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் நவநீத்குமாரிடம் இருந்து ரூ.62 அதிகமாக பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து சூப்பர் மார்க்கெட்டின் மேலாளரிடம் நவநீத்குமார் கேட்டதற்கு "இந்த விலையில் வாங்குவதாக இருந்தால் வாங்குங்கள். இல்லையென்றால் கடையை விட்டு வெளியே செல்லுங்கள்" என கோபமாக கூறியுள்ளார். இதனால் நவநீத்குமார் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நவநீத்குமார் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் கடையின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி ரூ.10 ஆயிரம் அபராதமாக விதித்து, அதை பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடாக வழங்கும்படியும், வழக்கு செலவு தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் ஏற்கனவே அதிகமாக செலுத்தப்பட்ட ரூ.62 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.