கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை அரசரடியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-.
மதுரை பொன்மேனி மெயின்ரோடு பகுதியில் மீனாட்சி நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள 2 தெருக்களுக்கு மீனாட்சி நகர் 1-வது தெரு மற்றும் 2-வது தெரு என பெயர் வைக்கப்பட்டு 1991-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்தது.
இந்த நிலையில் சிலர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் மீனாட்சி நகரில் உள்ள தெருக்களுக்கு ராஜ் பிள்ளை தெரு என தேர்தலையொட்டி பெயர் மாற்றம் செய்துள்ளனர். புதிதாக திடீரென்று பெயரை மாற்றியதால், இந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அத்துடன், தமிழக அரசு, தெருக்களின் பெயர்களில் சாதிப்பெயர்கள் இருக்கக் கூடாது என அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. இவ்வாறு இருக்கும்போது, ராஜ் பிள்ளை தெரு என பெயரை வைத்துள்ளது ஏற்புடையதல்ல. எனவே, சாதி பெயரில் அமைந்துள்ள இந்த தெருவின் பெயரை நீக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.