பண்டாரங்களுக்குத்தான் உரிமை உண்டு


பண்டாரங்களுக்குத்தான் உரிமை உண்டு
x

பண்டாரங்களுக்குத்தான் உரிமை உண்டு என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை


பழனி முருகன் கோவிலில் அபிஷேக கட்டணத்தை பங்கிட்டு வழங்க கோரிய வழக்கை கீழ்கோர்ட்டு தள்ளுபடி செய்த உத்தரவுக்கு எதிராக அர்ச்சகர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் அபிஷேகம், திருமஞ்சனம் பூஜை செய்வதற்கான கட்டணத்தில் குறிப்பிட்ட தொகையை தங்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என குருக்கள், அர்ச்சகர் தரப்பில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். தற்போது இந்த தொகையை பெற அர்ச்சகர்கள் தகுதியுடையவர்களா? அல்லது பண்டாரங்கள் தகுதி உடையவர்களா? இல்லை, இருவருக்கும் பங்கீடு செய்வதா? என முடிவு செய்ய வேண்டி உள்ளது.

பல்வேறு ஆவணங்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்த ஆவணங்களை பார்க்கும்போது ஆரம்ப காலம் முதல் பண்டாரங்கள் தான் திருமஞ்சன நீரை தொன்று தொட்டு எடுத்து வருகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த உரிமை பண்டாரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. குருக்கள், திருமஞ்சன சேவை நீரை எடுத்து வருவதாக எங்கும் குறிப்பிடவில்லை. பண்டாரம் சமூகத்தை சேர்ந்தவர்களே திருமஞ்சனத்திற்கான புனித நீரை அர்த்தமண்டபம் வரை சுமந்து வருகிறார்கள்.

எனவே கோவில் நிர்வாகம் நிர்ணயித்துள்ள தொகையை பெற்றுக்கொள்ள பண்டாரம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே தகுதியானவர்கள் என்று மாவட்ட, முன்சீப் கோர்ட்டுகள் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளன. இந்த தீர்ப்பில் இந்த கோர்ட்டு தலையிடுவதற்கான முகாந்திரம் இல்லை. எனவே இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story