ராமநாதபுரம் பஸ்நிலையத்தை சீரமைக்கக்கோரி வழக்கு


ராமநாதபுரம் பஸ்நிலையத்தை சீரமைக்கக்கோரி வழக்கு
x

ராமநாதபுரம் பஸ்நிலையத்தை சீரமைக்கக்கோரி வழக்கில் கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணையைச் சேர்ந்த தீரன் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழர் கட்சி மாநில செயலாளராக உள்ளேன். ராமநாதபுரத்தில் கடந்த 1992-ம் ஆண்டில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது. அப்போது 29 பஸ்கள் நிறுத்தும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆனநிலையில், தற்போது 450 பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ்நிலையத்தை சுற்றிலும் நகராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன.

சுமார் 20 ஆயிரம் பேர் நாள்தோறும் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த பஸ்நிலையம் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பயணிகளுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. கழிப்பறை, குடிநீர் வசதி போதுமானதாக இல்லை. பஸ் நிலையத்தின் மேற்கூரைகள் சேதமடைந்து உள்ளன. மழைக்காலங்களில் இங்கு தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் கூடுதல் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்யவும், கழிவுகளை முறையாக அகற்றி, சுத்தம் செய்யவும் வேண்டும். அதுமட்டுமல்லாமல், பயணிகள் ஓய்வு அறைகள் வசதியை அதிகரிக்கவும், சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரையை சீரமைத்து பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், நகராட்சி கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story