மணிமுத்தாற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம்
கல்லல் அருகே மணிமுத்தாற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி,
கல்லல் அருகே மணிமுத்தாற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமான தரைப்பாலம்
காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே சொக்கநாதபுரம் பகுதியில் இருந்து திருப்பத்தூர் செல்வதற்காக பட்டமங்கலம் செல்லும் சாலையின் குறுக்கே மணிமுத்தாறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கடந்த 1953-ம் ஆண்டு திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. சுமார் 70 ஆண்டு இந்த பழமையான தரைப்பாலம் சில இடங்களில் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
இந்த தரைப்பாலத்தை கடந்துதான் பட்டமங்கலம், கண்டரமாணிக்கம், திருக்கோஷ்டியூர், திருப்பத்தூர் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு செல்ல வேண்டும். தினந்தோறும் இந்த தரைப்பாலம் வழியாக பஸ் மற்றும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக இந்த கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் பாலத்தை கடந்துதான் திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வரும் நிலை உள்ளது.
போக்குவரத்து துண்டிப்பு
இந்நிலையில் மழைக்காலங்களில் இந்த தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்லும் போது இவ்வழியாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படுகிறது. இதனால் பல்வேறு தேவைக்காக செல்லும் பொதுமக்கள் மதகுபட்டி வழியாகவும், காரைக்குடி வழியாகவும் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்களும், மாணவர்களும் சிரமம் அடைகின்றனர்.
தற்போது இந்த தரைப்பாலத்தை அகற்றி விட்டு புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- சுமார் 70 ஆண்டுகாலமாக மழை மற்றும் வெள்ள காலங்களில் இந்த தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்வதால் கடும் சிரமங்களை சந்தித்து வருகிறோம். எனவே, இங்கு புதிதாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் காரணமாக தற்போது புதிய மேம்பாலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டும் கூட டெண்டர் ஒதுக்கப்படாமல் உள்ளதால் இன்னும் பணிகள் நடைபெறவில்லை.
கோரிக்கை
இதனால் இந்த பணிகள் நடைபெற இன்னும் கூடுதல் காலம் ஆகும் நிலை உள்ளதால் இனி வரும் மழைக்காலங்களில் இந்த தரைப்பாலத்தை மீண்டும் வெள்ளம் மூழ்கடித்து செல்லும் நிலை ஏற்பட்டு இந்தாண்டும் இந்த பகுதி மக்கள் 20 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை உடனடியாக மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.