சீர்காழியில், நீரில் மூழ்கி அழுகி வரும் பயிர்கள்
சீர்காழியில், வயலில் தேங்கிய மழைநீர் வடியாததால் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
சீர்காழி;
சீர்காழியில், வயலில் தேங்கிய மழைநீர் வடியாததால் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
அழுகும் பயிர்கள்
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே இரவில் 22 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் மழைநீர் வடிய தொடங்கிய நிலையில் மீண்டும் ஒரே நாளில் 43 செ.மீட்டர் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சீர்காழி, சட்டநாதபுரம், வைத்தீஸ்வரன் கோவில், காரைமேடு, கதிராமங்கலம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, புளிச்சக்காடு, ஆர்ப்பாக்கம், விளந்திடசமுத்திரம், கொண்டல், அகனி, வள்ளுவக்குடி, ஆதமங்கலம், பெருமங்கலம், கடவாசல், வடகால், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி கடந்த 4 நாட்களாக வடிய வழியில்லாமல் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
மின்வசதி
இதைப்போல தாழ்வான பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் மழை நீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. தொடர்மழையால் பல்வேறு சாலைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து வசதி இல்லாமல் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். பல்வேறு கிராமங்களுக்கு இன்னும் முழுமையாக மின்சார வசதி இல்லாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன.
இதைப்போல மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இறால் பண்ணைகள்
மேலும் பல்வேறு கடற்கரை கிராமங்களில் கடல் நீர் புகுந்ததால் விளை நிலங்கள் முற்றிலும் வீணாகிவிட்டது. கடற்கரையோரம் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறால்குட்டைகளில் உடைப்பு ஏற்பட்டு இறால்கள் கடலுக்குச் சென்று விட்டதால் இறால் பண்ணை உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர்.இந்நிலையில் மேலும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்து உள்ளனர். நெற்பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் இந்த ஆண்டு கேள்விக்குறியாகி உள்ளது.
கொள்ளிடம்
கொள்ளிடம் பகுதியில் தற்போது கிராம பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. எடமணல், இருவர்கொள்ளை, வழுதலைக்குடி, சூரக்காடு, வெள்ளப்பள்ளம், கீராநல்லூர், திருக்கருக்காவூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக மின்சாரம், குடிநீர் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.