வட்டார சேவை மையங்களுக்கு அதிவேக இணையதள சேவை; கலெக்டர் பூங்கொடி தகவல்


வட்டார சேவை மையங்களுக்கு அதிவேக இணையதள சேவை; கலெக்டர் பூங்கொடி தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2023 2:30 AM IST (Updated: 24 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஒன்றிய அலுவலகங்களில் செயல்படும் வட்டார சேவை மையங்களுக்கு அதிவேக இணையதள சேவை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.

திண்டுக்கல்

ஒன்றிய அலுவலகங்களில் செயல்படும் வட்டார சேவை மையங்களுக்கு அதிவேக இணையதள சேவை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிவேக அலைக்கற்றைக்கான தமிழ்நாடு அரசு கண்ணாடி இழை வலையமைப்பு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் அரசு அலுவலக பணிகள், அரசின் திட்டங்கள், சலுகைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தற்போது இணையதளம் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. கிராம ஊராட்சி பணிகளை நேரடியாக கண்காணிக்க இணையதள பயன்பாடு அவசியமாகிறது. மேலும் பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் இணையதள சேவை இன்றியமையாததாக மாறிவிட்டது.

எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் தடையின்றி இணையதள சேவை கிடைக்க செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிவேக இணையதள சேவை

இதன் ஒரு கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் அதிவேக அலைக்கற்றைக்கான தமிழ்நாடு அரசு கண்ணாடி இழை வலையமைப்பு திட்டமான பாரத்நெட் பேஸ்-II, பேக்கேஜ்-D-யின் கீழ் அதிவேக இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படும் வட்டார சேவை மையங்கள் மற்றும் 306 கிராம ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி சேவை மையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

தற்போது முதற்கட்டமாக 9 வட்டார சேவை மையங்கள், 142 கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடங்களுக்கு சோதனை ஓட்ட முறையில் அதிவேக இணையதள சேவைக்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துடன் இணைந்து ஊரக பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இணையதள சேவை கொடுப்பதற்கான கணக்கெடுப்பு பணியும் நடக்கிறது.

இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த கூட்டத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரெங்கராஜன், தமிழ்நாடு அரசு கண்ணாடி இழை வலையமைப்பு திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் அமானுல்லா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story