சாலை சந்திப்புகளில் விபத்து தடுப்பு நடவடிக்கை
சாலை சந்திப்புகளில் விபத்து தடுப்பு நடவடிக்கை
போடிப்பட்டி,
பொள்ளாச்சி-தாராபுரம்-கரூர் சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் குடிமங்கலம், பெதப்பம்பட்டி, கொங்கல்நகரம் உள்ளிட்ட பகுதிகளில் விபத்துக்களைத் தடுக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.
முன்னெச்சரிக்கை அறிவிப்புகள்
பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் வழியாக கரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை 120 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.இந்த சாலையை ஒட்டிய பகுதிகளில் நூற்பாலைகள், கோழிப்பண்ணைகள், மின் உற்பத்தி காற்றாலைகள் என ஏராளமான தொழில்கள் உள்ளது. இதனால் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக கடந்து செல்கின்றன. இந்த சாலை பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் உடுமலை செஞ்சேரி மலை சாலையையும், குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் உடுமலை திருப்பூர் சாலையையும் குறுக்காகக் கடக்கிறது.
அத்துடன் ஆங்காங்கே பல இடங்களில் கிராம சாலைகள் இந்த மாநில நெடுஞ்சாலையுடன் வந்து இணைகின்றன. இதனால் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும் சாலை விரிவாக்கம்ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை.மேலும் இந்த சாலை சந்திப்புகளில் பல இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளோ, பாதுகாப்பு நடவடிக்கைகளோ இல்லாததால் அடிக்கடி விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.எனவே இந்த சாலையில் விபத்துக்களைத் தடுக்கும் விதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் சாலைப் பயணம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கள ஆய்வு
பெதப்பம்பட்டி நால்ரோடு, குடிமங்கலம் நால்ரோடு பகுதிகளில் சிக்னல் அல்லது ரவுண்டானா அமைக்க வேண்டும். அத்துடன் கொங்கல்நகரம் சாலை சந்திப்பு பகுதியில் வாகனங்கள் அதி வேகமாகவும் தாறுமாறாகவும் இயக்கப்படுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த முக்கிய மாநில நெடுஞ்சாலையில் இதுவரை நடந்த விபத்துக்கள் மற்றும் சாலை பாதுகாப்பு நிலை குறித்து அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து, தேவைப்படும் இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.